போதையை எமது சமூகத்தில் இருந்து முற்றாக துடைத்தெறியாமல் நாம் நிலவுக்கு போவதைப்பற்றி சிந்திக்க முடியாது
உலகில் ஆகக்கூடிய சம்பளம் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றால் அது பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்குத்தான் என்று நான் சொல்வேன். ஏன் என்றால் எமது குழந்தைகளின் ஆரம்பமே அங்கேதான் தொடங்குகிறது. அவர்கள் ஒரு ஆசிரியராக மாத்திரமல்லாமல், ஒரு தாயாக, ஒரு வைத்தியராக, ஒரு சமூக சேவகராக இருந்து எமது குழந்தைகளின் ஆரம்பத்தினை தொடக்கி வைக்கின்றார்கள் என கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கறைப்பற்று மாநகரசபை முன்னாள் உறுப்பினருமான, கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் சம்மேளன நிறைவேற்று சபை உறுப்பினருமான எஸ். எம். சபீஸ் தெரிவித்தார்.
பாலமுனை ஹில்ப் சமூக சேவை மன்ற பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எஸ் எம் சபீஸ் கலந்துகொண்டிருந்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,
இங்கே போதை ஒழிப்புக்கான வினோத உடைப்போட்டியானது மற்றவகளைப் போன்று என்னையும் வியப்பில் ஆழ்த்தியது. இது சமூகத்துக்கு சொல்லும் ஒரு செய்தியாகும். போதையை எமது சமூகத்தில் இருந்து முற்றாக துடைத்தெறியாமல் நாம் நிலவுக்கு போவதைப்பற்றி சிந்திக்கமுடியாது.
பெற்றோர்கள் தமது பிள்ளைகள் வைத்தியராக, பொறியியலாளராக, சட்டத்தரணியாக, கணக்காளராக, வரவேண்டும் என்று பிரார்த்திப்பது போன்று நல்ல தலைவராகவும் வரவேண்டும் என பிரார்த்திக்க வேண்டும். நல்ல தலைவர்கள் இல்லாத சமூகம் மந்தைக் கூட்டத்துக்கு சமனாகும்.
உங்களுக்கு நல்ல சகோதரனாகவும் இந்த குழந்தைகளின் எதிர்காலத்தின்மீது கரிசனை கொண்டவர்களாகவும் நாங்கள் இருப்போம் எங்களுக்காவும் பிராத்தியுங்கள் என தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்