போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபர்களுக்கு தடுப்புகாவல்
கிரிந்த கடற்கரை பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீரவான் இவ்வாறு உத்தரவிட்டிருந்தார்.
கிரிந்த அந்தகலவெல்ல கடற்கரை பகுதியில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றின் போது கடற்கரையில் கயிறு ஒன்றின் உதவியுடன் மிதந்துக் கொண்டிருந்த நிலையில் 394 கோடி ரூபா பெறுமதி மிக்க 329 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
தென் மாகாண பொலிஸ் குழு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவினருடன் இணைந்து மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிகாலை 1.00 மணியளவில் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து போதைப்பொருள், கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மற்றும் போதைப்பொருளை கொண்டு வருகைத் தந்திருந் 7 சந்தேகநபர்களை அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
இதன்போது சந்தேகநபர்கள் வருகைத் தந்திருந்த 7 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஆழ்கடல் மீன்பிடி படகொன்றின் மூலம் கொண்டுவரப்பட்டு பின்னர் சிறிய மீன்பிடி படகொன்றிற்கு மாற்றப்பட்டுள்ளது. குறித்த மீன்பிடி படகு கரையை அடைந்த நிலையில், படகிலிருந்த சந்தேகநபர் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் தகவல் அறிந்ததை அடுத்து போதைப்பொருளை கயிற்றின் உதவியுடன் கடலில் எரிந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த போதைப்பொருள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த, துபாயில் மறைந்திருக்கும் திக்வெல்ல பகுதியை சேர்ந்த ‘ரன் மல்லி’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. கைது நடவடிக்கையை தொடர்ந்து சந்தேகநபர்கள் புதன்கிழமை (12) திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபர்களை 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கி நீதவான் உத்தரவிட்டார்.
