
போக்குவரத்து விதிமீறல் இனி குற்றவியல் குற்றமாகும் – பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!
இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குடிபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனம் ஓட்டும் சாரதிகளுக்கு எதிராக போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாக, குற்றவியல் சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஜி.ஜே. சேனாதீர இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே இந்த விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மதுபானம் அல்லது போதைப்பொருள் உட்கொண்டு ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி, பாரிய விபத்துக்கள் அல்லது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் (Criminal Law) கீழ் வழக்குத் தொடருமாறு பொலிஸ் மா அதிபர் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் இத்தகைய குற்றங்கள் சாதாரண போக்குவரத்து விதிமீறல்களாகக் கருதப்படமாட்டாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
