பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணி இடைநீக்கம்

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரு உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சார்ஜென்ட், கான்ஸ்டபிள் ஆகிய இருவரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் .

பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபர், நேற்று கழிவறை பயன்படுத்த வேண்டும் என கூறியதாகவும், அப்போது சிறைக் கதவு திறக்கப்பட்டபோது தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் , அண்மையில் பாணந்துறை பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் அவர் தொடர்புடையவர் எனவும் என தெரிவிக்கப்படுகிறது .

சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தில் விடயத்துக்கு பொறுப்பாக செயற்பட்ட அதிகாரியும், சம்பவத்தின் போது பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பாக இருந்த அதிகாரியும் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார் .