பெற்றோல் மாபியா : கறுப்ப சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் எரிபொருள்

மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு எரிபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.

பல நாட்களாக இரவு பகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்தும் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் மக்கள் அதிக விலை கொடுத்து என்றாலும் எரிபொருளை பெற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான ஒரு நிலையை பயன்படுத்தி பெற்றோல் மாபியாக்கள் உருவாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

அதன்படி பல்வேறு இடங்களில் ரகசியமாக ஒரு லீற்றர் டீசல் மற்றும் பெட்ரோல் 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

விவசாயம் செய்பவர்கள் மற்றும் அத்தியாவசிய பயணங்கள் செல்பவர்கள் இவ்வாறான கறுப்பு சந்தையில் அதிக விலை கொடுத்து எரிபொருளை கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்பவர்கள் மோசடியான முறையில் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்திலும் எரிபொருளை இரவு நேரங்களில் ரகசியமாக தமக்கு வேண்டியர்களுக்கு அதிக விலைக்கு எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் வழங்குவதாகவும், அதற்கு இராணுவத்தினர் உடந்தையாக இருப்பதாகவும் மக்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்.

மேலும், மன்னார் மாவட்டத்திலும் மண்ணெண்ணை மற்றும் பெற்றோல் பதுக்கல் சம்பவங்கள் இடம்பெற்று நுகர்வோர் அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

பல்வேறு வாகனங்களில் வரிசையில் நின்று எரிபொருளை பெறும் குறிப்பிட்ட சில நபர்கள் அவற்றை கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரிய வந்துள்ளது.

எனினும், பல நாட்களாக காத்திருந்தும் பெற்றோல் கிடைக்காத மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளுக்காக பெற்றோல் மற்றும் டீசலை இவ்வாறு கறுப்பு சந்தைகளில் அதிக பணம் கொடுத்து பெற தயாராக இருப்பதால் இந்த பெற்றோல் மாபியாக்கள் உருவாகுவதை தவிர்க்க முடியாதுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசை நீண்டு கொண்டே போகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எரிபொருள் வரிசையில் நிற்கும் பொது மக்களிடம் இராணுவத்தினரும், பொலிஸாரும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், இவ்வாறான இடங்களில் பல வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் தெரிய வருகின்றது.