
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார சட்டங்களில் திருத்தம்!
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் விடயப்பரப்பிற்கு அமைவாக, இவ்வருடத்திற்குள் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் தற்போதுள்ள சில சட்டங்களைத் திருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நடைமுறையிலுள்ள சட்டங்களைத் திருத்துவதற்குமாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அவ்விடயங்கள் பின்வருமாறு:
01.சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை (Cyber crimes) கையாள்வதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துதல்.
02.ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைக்கு அமைய, ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ எனும் பெயரில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்.
03.2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்.
04.வளர்ப்புப் பெற்றோர் பராமரிப்புக்காக புதிய சட்டத்தை உருவாக்குதல்.
05.1939 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்.
06.1941 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க சிறுவர் தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்.
07.1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தைத் திருத்துதல்.
