
புயல் காரணமாக 100 க்கும் மேற்பட்ட கிளிகள் பலி
உத்தரப் பிரதேசம், ஜான்சி அருகெ கிராமம் ஒன்றில் ஏற்பட்ட கடுமையான புயலால் 100-க்கும் மேற்பட்ட கிளிகள் உயிரிழந்துள்ளன. இந்த சோகமான சம்பவத்தின் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில், புயலின் கோரத் தாண்டவத்திற்குப் பிறகு, கிராமத்தின் பல்வேறு பகுதிகளில், மரங்களின் அடியிலும், இடிந்த கட்டிடங்களுக்கு அருகிலும் நூற்றுக்கணக்கான கிளிகள் இறந்து கிடப்பது நெஞ்சை உலுக்குகிறது. சில கிளிகள் மரக் கிளைகளில் தலைகீழாகத் தொங்கியபடியும், சில மின் கம்பிகளில் சிக்கியபடியும் இறந்துள்ளன. இந்தப் பறவைகளின் திடீர் உயிரிழப்பு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து, இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும், வனவிலங்குகளின் பாதுகாப்பைப் பற்றியும் தங்கள் ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், உயிரிழந்த கிளிகளின் உடல்களை அப்புறப்படுத்தி, எஞ்சியிருக்கும் பறவைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புயல் பாதிப்பிலிருந்து வனவிலங்குகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.