
பிரித்தானியா செல்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
பிரித்தானியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடுபவர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குடிவரவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில், பாரம்பரிய விசா ஸ்டிக்கர் முறையை நீக்கி, முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ‘eVisa’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் விசா மற்றும் குடிவரவு திணைக்களம் (UKVI), தனது சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், கடவுச்சீட்டில் ஒட்டப்படும் காகித வடிவிலான விசா ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக, ஒருவரின் அடையாளத்தையும் குடிவரவு நிலையையும் உறுதிப்படுத்த மின்னணு முறையிலான ‘eVisa’ பயன்படுத்தப்படும்.
இந்த புதிய மாற்றமானது தற்போது ஒரு இடைக்காலக் கட்டத்தில் உள்ளது.
தற்போதைய நிலை: 2026 ஜனவரி 12 முதல் விசா பெற்ற பலருக்கு, பாதுகாப்புக் கருதி eVisa மற்றும் விசா ஸ்டிக்கர் ஆகிய இரண்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
எதிர்காலத் திட்டம்: 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், விசா ஸ்டிக்கர்கள் வழங்கும் நடைமுறையை முழுமையாக நிறுத்த பிரித்தானிய குடிவரவு திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இந்த டிஜிட்டல் முறை அறிமுகமாவதன் மூலம், விசா ஆவணங்கள் தொலைந்து போவது அல்லது சேதமடைவது போன்ற சிக்கல்கள் தவிர்க்கப்படும்.
பயணிகள் தங்களின் குடிவரவு விபரங்களை இணையதளம் வாயிலாகவே பாதுகாப்பாகச் சரிபார்க்க முடியும்.
பிரித்தானியாவின் இந்த அதிரடி மாற்றமானது, சர்வதேசப் பயணிகளின் எல்லைக் கட்டுப்பாட்டுச் சோதனைகளை வேகப்படுத்தவும், போலியான ஆவணப் பயன்பாடுகளைத் தடுக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
