
பாடசாலை விருது வழங்கல் சர்ச்சை : விசேட விசாரணையில் களமிறங்கியது மனித உரிமைகள் ஆணைக்குழு!
இலங்கையின் பிரபல பாடசாலையொன்றின் விருது வழங்கும் நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு தற்போது தலையிட்டுள்ளதாகவும், இது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில நிறுவனங்கள் தங்களிடம் உள்ள அதிகாரத்தை எதேச்சதிகாரமான முறையில் பயன்படுத்த முடியாது.
பாடசாலைகள் உட்பட அனைத்து நிறுவனங்களும் முறையான நடைமுறைகளின்படியே செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் தொடர்பில் செயற்படும்போது உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை அரசாங்க நிறுவனங்கள் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
சிறுவர் துஷ்பிரயோகம் என்பது உடல் அல்லது உள ரீதியான பாதிப்பு மட்டுமல்லாது, அவர்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்க்காமை மற்றும் பங்களிப்பிற்கான வாய்ப்புகளை மறுப்பதும் இதில் அடங்கும்.
கடந்த காலங்களில் மாணவர் தலைவர்கள் நியமனம் மற்றும் பதக்கங்கள் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து ஆணைக்குழு விசாரணை நடத்தி பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா? அல்லது அதன் மூலம் ஏதேனும் ஒரு மாணவர் அநீதிக்குள்ளாகியுள்ளாரா? என்பது குறித்து ஆணைக்குழு ஆராயும்.
இந்த விடயம் மாணவர்களையும் பாடசாலையின் ஒட்டுமொத்த அமைப்பையும் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவுகளின் அடிப்படையில் தகுந்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும், இவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளாகும் மாணவர்கள் அல்லது பெற்றோர்கள், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அல்லது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளைச் செய்ய முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
