பழங்களுக்கு பணம் செலுத்தாமல் ஏமாற்றிய வர்த்தகருக்கு 3 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!

இரண்டு கொள்கலன் பழங்களுக்கான 5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை செலுத்தாமல் ஏமாற்றிய இலங்கை வணிகருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம், மூன்று ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அமெரிக்க ஏற்றுமதியாளருக்கு 15 மில்லியன் ரூபாய் இழப்பீடு செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை பகுதியைச் சேர்ந்த பழங்களின் மொத்த வியாபாரியான குற்றஞ்சாட்டப்பட்டவர், நீண்ட காலமாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏற்றுமதியாளரிடமிருந்து பழங்களை இறக்குமதி செய்து வந்தார்.

கொள்கலன் இலங்கைக்கு வந்த பின்னர் பணம் செலுத்துவது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த வியாபாரம் நடைபெற்றது.

இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் வியாபாரம் நடைபெற்றது.

முன்னர் பல சந்தர்ப்பங்களில் பொருட்களை வாங்கி உரிய முறையில் பணம் செலுத்தியிருந்தார்.

எனினும், அமெரிக்க ஏற்றுமதியாளர் அனுப்பிய கடைசி இரண்டு கொள்கலன் பழங்கள் (திராட்சை, ஆப்பிள் போன்றவை)க்கான பணத்தை குற்றஞ்சாட்டப்பட்டவர் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளார்.

இது தொடர்பான உயர்நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டது.