பயங்கரவாத தடைச்சட்டத்தை மீறாத வகையில் நினைவேந்தல் செய்வதற்கான ஆலோசனைகளை பொலிஸார் வழங்கியுள்ளனர்
-மூதூர் நிருபர்-
கடந்த வருடம் சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வைச் செய்வதற்கு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையுத்தரவால் நினைவேந்தல் செய்ய முடியாமல் போனது.இம்முறை பயங்கரவாத தடைச்சட்டத்தை மீறாத வகையில் நினைவேந்தல் செய்வதற்கான ஆலோசனைகளை சம்பூர் பொலிஸார் வழங்கியுள்ளதாகவும் ,இரண்டு தடவை சம்பூர் பொலிஸாரை சந்தித்து ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும் சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் க.பண்பரசன் தெரிவித்தார்.
சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
பொலிஸாரின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸார் உற்பட முப்படையினரின் கடமைகளுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
நினைவேந்தல் நிகழ்வுகளை செய்வதற்கான போதிய நிதி இதுவரையில் எமக்கு கிடைக்கப் பெறவில்லை.இருப்பினும் மாவீரர் நாள் நினைவேந்தல் தினத்தை காரணம் காட்டி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில அரசியல் கட்சிகள் தமது அரசியல் இலாபத்துக்காக நிதி சேகரித்து வருகின்றனர்.
புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்கள்களாக இருந்தாலும் சரி அல்லது உள்நாட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி உதவி செய்ய விரும்புவோர் வெளிப்படையான எமது கணக்கிலக்கத்திற்கு உதவி செய்ய முடியும் அல்லது எமது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
ஏனைய அரசியல் கட்சிகளுக்கோ தனியார் அமைப்புகளுக்கோ உதவிகளை செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
இது ஜனநாயக நாடாகும். இந்த நாட்டில் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.
இந்த விடயம் அரசியல் அமைப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை கூட கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் மறுத்திருந்தார்கள்.
தற்போதைய புதிய அரசாங்கத்திற்கு வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் பெரும்பான்மை அதிகூடிய வாக்குகளை வழங்கியுள்ளமையானது மீண்டும் தமிழர் தேசம் ஜனநாய ரீதியில் பயணிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அந்த வகையில் புதிதாக ஆட்சியை அமைத்திருக்கின்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைகள் ஏதும் விதிக்காது எமது உரிமைகளை மதித்து அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம், என தெரிவித்தார்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்