நுவரெலியாவில் நடைபாதை வியாபாரிகள் ஆணையாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்-

நுவரெலியாவில் நடைபாதை வியாபாரிகள் வீதியோரங்களில் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்கின்றனர் எனினும் தற்போது நுவரெலியா மாநகர சபை மாநகர ஆணையாளரின் நடவடிக்கையானது நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக குற்றஞ் சாட்டப்படுகிறது.

மாநகர ஆணையாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,

தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக நுவரெலியாவில் பல்வேறு பல்வேறு சுற்றுலா அபிவிருத்தி திட்டங்கள் முன்வைக்கின்ற போதிலும் அவை அனைத்துக்குமே நுவரெலியா மாநகர சபை மாநகர ஆணையாளரின் நடவடிக்கையானது தடையாக உள்ளது , நுவரெலியா மாநகரசபை சட்டங்களினால் மாநகர சபைக்கு கிடைக்கப்பெறுகின்ற அதிகாரங்களின் படி பணிகள் அல்லது வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்போது அதனை சவாலுக்குட்படுத்தி பொது மக்களுக்கு ஆற்றும் சேவைகளை தடுத்தல் மற்றும் சேவைகள் வழங்குவதனை இல்லாதொழிப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

அது போலவே வீதியோர வியாபாரிகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில்லை , எங்களுடைய வியாபாரத்திற்கும் பாரிய இடையூறுகளை உருவாக்குகின்றார் எனவே பொதுமக்களுக்கு நலம் பெறும் வகையில் சேவையாற்றும் புதிய மாநகர ஆணையாளர் எங்களுக்கு வேண்டும் அப்போதுதான் நுவரெலியா நகரம் அபிவிருத்தியை நோக்கி நகரும் எனவும் அத்துடன் நடைபாதை வியாபார ஒழுங்கு முறை சட்டத்தின்படி வியாபாரம் செய்ய ஒழுங்குபடுத்தி கொடுக்க வேண்டும். வியாபாரிகளை அப்புறப்படுத்தி அவர்கள் மீது அடக்குமுறையை திணிக்க கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்து கலைந்து சென்றனர் .