நீர் மோட்டார் வாங்குவதாக தெரிவித்து ஒன்லைனில் 569,610 ரூபாய் மோசடி!

2024 மே 29 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப்பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 569,610 ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நால்வர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 38 வயதுடைய தெஹிதெனிய மற்றும் முருதலாவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நீர் மோட்டார் ஒன்றை வாங்குவதாகக் கூறி, அதற்காக முன்பணம் செலுத்துவதாக கூறி, விற்பனையாளரின் வங்கிக் கணக்கின் OTP இலக்கத்தைப் பெற்று, பணத்தை மோசடி செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பண மோசடி, தவறான பயன்பாடு மற்றும் நம்பிக்கைக்கு புறம்பாக நடந்துகொள்ளல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஒருவரும், அவருக்கு உதவிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று புதன்கிழமை வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.