நாள்பட்ட நோயினால் 3000 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாள்பட்ட நோய்களுக்கு உரிய சிகிச்சை பெற முடியாமல் சுமார் 3,000 உக்ரேனியர்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவின் போர் காரணமாக உக்ரைனில் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவை மையங்கள் மீது இது வரை ரஷ்யா 200 தாக்குதல்களை நடத்தியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பணிப்பாளர் ஹான்ஸ்க்ளுக் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. 53 உறுப்பு நாடுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்திலேயே நேற்று அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். உக்ரைனில் உள்ள 40 வீதமான குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவராவது நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சை தேவைப்படுபவராக உள்ளார்.
ஆனால், தற்போதைய சூழலில் அவர்கள் சுகாதார சேவைகளை அணுக முடியாதுள்ளனர். இதன் விளைவாக குறைந்தது 3,000 தவிர்க்கக்கூடிய இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.