நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுவிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி
ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை பெற்று வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் தமிழக அரசு தீர்மானத்தின் அடிப்படையில் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, உச்சநீதிமன்றத்தைப் போல அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் அளித்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.