
தொலைக்காட்சி உரிமங்கள் பறிபோகும்
ஊடகங்கள் பொதுமக்களுக்குத் துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும் என்றும், நிபந்தனைகளை மீறிச் செயற்படும் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பு உரிமங்கள் இரத்து செய்யப்படலாம் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் இலங்கையில் தொலைக்காட்சி அலைவரிசை உரிமங்கள் தற்காலிகமானவை.
அவை வழங்கப்படும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.
இது விளையாட்டல்ல; தேசிய அலைவரிசைகள் என்பது பொதுமக்களின் சொத்து எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது தொலைக்காட்சி செய்திகளில் பத்திரிகைச் செய்திகளை வாசிக்கும்போது, சில செய்தி வாசிப்பாளர்கள் தமது சொந்தக் கருத்துக்களையும் வியாக்கியானங்களையும் திணிக்கின்றனர்.
இது பொதுமக்களைத் திசைதிருப்பும் செயலாகும்.
குறிப்பாக பொதுச் சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான தரவுகளைக் கையாளும்போது மிகுந்த அவதானம் தேவை.
தவறான புள்ளிவிபரங்கள் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் பொதுச் சுகாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் செய்திகளை வெளியிடும் அலைவரிசைகளின் உரிமத்தை இரத்து செய்யும் அதிகாரம் அமைச்சருக்கு உண்டு.
அவ்வாறு செய்யும் முன், திருத்தங்களை மேற்கொள்ளுமாறு உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
