தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை
தென் கொரியாவில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி யூன் சுக் யோலை பதவி நீக்கம் செய்வதற்கான குற்றப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்துள்ளனர்.
தேசிய சட்டமன்றத்தில் 72 மணி நேரத்திற்குள் குறைந்தது மூன்றில் இரண்டு பகுதியினர் இதனை நிறைவேற்றுவதற்கு வாக்களிக்க வேண்டும்.
அவசரக்கால இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி யூன் சுக் யோல் நடவடிக்கை எடுத்தமை தொடர்பிலேயே குறித்த குற்றப்பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
‘வட கொரியாவின் கம்யூனிச சக்திகளிடமிருந்து’ நாட்டைப் பாதுகாக்கவும் அரசுக்கு எதிரான சக்திகளை ஒழிக்கவும் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதாக தென் கொரிய ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எனினும், அவரது பிரகடனத்திற்குப் பின்னர் இரண்டு மணி நேரத்திற்குள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மீறி, நாடாளுமன்றத்தில் கூடி அவரது முடிவைத் தடுப்பதற்கு வாக்களித்தனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அமைதியின்மையும் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திடீரென அமுல்படுத்தப்பட்ட அவசரக்கால இராணுவச் சட்டத்தைத் தளர்த்துவதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அங்குள்ள பல தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளதுடன் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்