திருமலையில் வாள் வெட்டு : பெண்ணின் கை துண்டிப்பு
-திருமலை நிருபர்-
திருகோணமலை-கோணேஷபுரி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கைகலப்பில் தாயும் மகளும் வால்வெட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
கோணேஷபுரி பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் தாயின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக அவசர சத்திர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வாள்வெட்டுக்கு இலக்கானவர் நிலாவெளி -கோணேஷபுரி வீட்டு திட்டத்தில் வசித்து வரும் ஸ்ரீதரன் சந்ராரஜினி (வயது -50) என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த பெண்ணின் மகளான ஸ்ரீதரன் சந்திரிகா (வயது-30) என்பவர் தாயை வாளால் வெட்ட முற்பட்டபோது தடுக்க முற்பட்ட போது காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் துண்டிக்கப்பட்ட கையை பொருத்துவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை குறித்த வால்வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.