திருகோணமலையில் காணாமல் போன மாணவனை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த, எம்.எல்.எம்.எம். முன்சித் (வயது 17) என்ற பாடசாலை மாணவன், நேற்று திங்கட்கிழமை காலை முதல் காணாமல் போயுள்ளதாக, திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் பிரபல வழக்கறிஞர் ஒருவரின் மகனான குறித்த மாணவன், நேற்று காலை 7.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மாலை வரை வீடு திரும்பவில்லை.

அவர் பாடசாலைக்குச் சென்றிருக்கிறார் என குடும்பத்தினர் எண்ணியிருந்த நிலையில், அவர் பாடசாலைக்கு செல்லவில்லை என்பதும், நேற்று நடைபெற்ற பரீட்சையில் அவர் பங்கேற்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து பாடசாலை நிர்வாகம் இது தொடர்பாக பொலிஸில் புகார் அளித்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பாடசாலையின் மைதானத்திற்கு வெளியே உள்ள சமுத்திரகம கிராமத்திற்கு முன்னாலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில், குறித்த மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகங்களுடன் கூடிய பை ஆகியவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

மாணவன் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

மாணவன் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்து இருப்பின், திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.