திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர்களின் இணைத் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி வரவேற்புரையை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமானது.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும்  கூட்டத்தில் ஆராயப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்டல் தாவரங்களை பாதுகாக்கும் செயற்திட்டம், சட்டவிரோதமாக காணி பிடிப்பவர்களிடமிருந்து அரச காணிகளை பாதுகாப்பதற்கான செயற்திட்டத்தை உருவாக்குதல், மூதூர் பிரதேச செயலக பிரிவின் நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள ஆதிவாசி மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், மான்கள் வீதி விபத்தில் சிக்குவதனை தடுப்பதற்காக திருகோணமலை சங்கமித்தா யாத்திரீகர் மண்டப வீதியில் வேகத் தடைகளை அமைத்தல், கிண்ணியா பிரதேச செயலக பிரிவிலுள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உரிய காணிகளில் நீண்டகாலமாக வசிக்கும் மக்களுக்கு விரைவாக காணி உறுதிகளை வழங்குதல், சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக கிண்ணியா பிரதேசத்தில் உப்பாறு கடற்கரையை அழகுபடுத்துதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

மேலும் கந்தளாய் மீஹஸ்வெவ வாய்கால் அமைப்பதற்காக வன பாதுகாவல் திணைக்களத்தின் விதந்துரையைப் பெறுதல், இலுப்பைக்குளத்தில் திருகோணமலை பொது மருத்துவமனை நிர்மாணம் வேலைகளின் முன்னேற்றத்தை ஆராய்தல், திருகோணமலை உயர் பெண்கள் கல்லூரியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள நுழைவு பாதையை சீராக்குதல், கிண்ணியா பிரதேச சபை பிரதேசத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை (OIC) அலுவலகத்தை மீள நிறுவுதல், கிண்ணியா தள வைத்தியசாலையைப் புதிதாக ஒதுக்கப்பட்ட காணிக்கு கொண்டு செல்லுதல் போன்ற பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.

இதன்போது கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் அரச உயரதிகாரிகள் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்