
“திமுக தீய சக்தி- தவெக தூய சக்தி” – ஈரோட்டில் விஜய் ஆவேச உரை!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதன்போது திமுகவை ‘தீய சக்தி’ என்றும், தமிழக வெற்றிக் கழகத்தை ‘தூய சக்தி’ என்றும் விஜய் மிகக் கடுமையாக விமர்சித்தார்.
“நாங்கள் எங்கள் எதிரியைச் சொல்லிவிட்டுத்தான் களத்திற்கு வந்துள்ளோம், களத்தில் இல்லாதவர்களை எதிர்ப்பதற்கான எண்ணம் எங்களுக்கில்லை” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
அத்துடன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி மாறினாலும் வறுமையில் இருக்கும் மக்களுக்கு விடிவுகாலம் வரவில்லை என்றும், அவர்களுக்காக உழைக்கவே தமது அரசியல் பயணம் தொடங்கியதாகவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
மஞ்சள் மாநகரான ஈரோட்டில் கிடைத்த வரவேற்பு தனது வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பிற்குப் புறப்பட்டது முதலே தெரிந்தும் தெரியாமலும் பல தடைகள் வந்ததாகவும், மக்களின் தூய அன்பினால் அவற்றை முறியடித்து வருவதாகவும் அவர் கூறினார்.
நிர்வாகிகளுக்குப் பாராட்டு: நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ஈரோடு மாவட்டச் செயலாளர்களுக்கும், பாதுகாப்பு வழங்கிய காவல்துறைக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.
