தனது சொந்த மகளை பலருடன் இணைந்து கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த தந்தை

-அம்பாறை நிருபர்-

ஆபாச படம் காண்பித்து, சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு, தலைமறைவாகி இருந்த 3 சந்தேக நபர்களில் ஒருவர், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதுடைய குறித்த சந்தேக நபர், சம்பவம் இடம்பெற்று 43 நாட்களின் பின்னர், கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

2025-12-11 அன்று, 12 வயது மதிக்கத்தக்க தனது சொந்த மகளை, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த தந்தை உட்பட 5 சந்தேக நபர்கள், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேகநபர்கள், தலைமறைவாகிய நிலையில், அவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த வழக்கின் தவணை, சம்மாந்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்கப்பட்ட தந்தை தவிர ஏனைய 4 சந்தேக நபர்களும் அடையாள அணி வகுப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

இதன் போது, பாதிக்கப்பட்ட சிறுமி 4 சந்தேக நபர்களையும், அடையாள அணிவகுப்பில் இனங்காட்டினார்

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி, பாதுகாப்பு காரணங்களுக்காக வெளி மாவட்டம் ஒன்றில் உள்ள சிறுவர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில் ஒருவர், கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

வொலிவேரியன் கிராமத்தில் வைத்து கைதான சந்தேக நபர், கல்முனை குடி பகுதியை பிறப்பிடமாகவும், அக்கரைப்பற்று பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட குடும்பஸ்தர், என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அவர் இன்று சனிக்கிழமை உரு மறைக்கப்பட்ட நிலையில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன் போது, சந்தேக நபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆந் திகதி அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்த பணிப்புரை விடுத்த நீதிவான், வழக்கினை மறு தவணைக்கு ஒத்தி வைத்தார்.

முறைப்பாட்டுக்காரரான 12 வயது சிறுமியினால் கூறப்பட்ட பெயர்கள் யாவும், சந்தேக நபர்களின் பட்டப் பெயர்களாகவும், ஊர்களில் அழைக்கப்படுகின்ற பெயர்களாகவும் இருப்பதால் எஞ்சிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண ஆலோசனைக்கமைய, நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே நெறிப்படுத்தலில், பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழு, பல்வேறு தரவுகளை சேகரித்து, எஞ்சிய 2 சந்தேக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம்

அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு பகுதியில் வசித்து வந்த ஐவர் கொண்ட குடும்பம், பொருளாதார நிலைமை காரணமாக அவ்விடத்தில் இருந்து குடிபெயர்ந்து, அருகில் உள்ள மற்றுமொரு ஊரான நிந்தவூர் பகுதியில் உள்ள புறநகரில் வாடகை அடிப்படையில் வீடொன்றை பெற்று வாழ்ந்து வந்தனர்.

இக்குடும்பத்தில், 18 வயது ஆண்பிள்ளை, 12 வயது பெண்பிள்ளை, 5 வயது ஆண்பிள்ளை மற்றும் தந்தை தாய் ஆகியோர் இருக்கின்றனர்.

குடும்பத்தில் உள்ள 18 வயதான ஆண்பிள்ளை, உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றார்.

குடும்பத்தில் 40 வயதான தந்தை கடற்தொழில் செய்து வருகிறார், 36 வயதான தாய் வீட்டில் இருக்கிறார், அவர்களுடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியும், சிறுமியின் இளைய சகோதரனான 5 வயது சிறுவனும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ,சிறுமியின் தந்தையுடன் சேர்ந்து கடற்தொழிலில் ஈடுபடும் அவருடைய நண்பர்கள் சிறுமியின் தாயுடன் முறைகேடான உறவில் இருந்துள்ளனர். சிறுமியின் தந்தையின் சம்மதத்துடனேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொருளாதார தேவைக்காக தனது மனைவியை ஏனைய நபர்களுடன் தவறான உறவு வைத்துக்கொள்ள அனுமதித்த சிறுமியின் தந்தை தனது 12 வயது மகளான குறித்த சிறுமிக்கு ஆபாச படங்களை காண்பித்து வன்புணர்வு செய்துள்ளார்.

பின்னர் தனது நண்பர்களான ஏனைய சந்தேகநபர்களுக்கு தனது மகளான சிறுமியை பணத்திற்காக விற்றுள்ளார்.

இவை அனைத்தும் சிறுமியின் தாயாரின் விருப்பத்துடன் இடம்பெற்றமை பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் இதற்காக சந்தேக நபர்களிடமிருந்து சிறுமியின் தந்தை 20 ஆயிரம் 10 ஆயிரம் 2 ஆயிரம் என பணம் பெற்றுள்ளார்.

அதன்பின்னர் இவ்விடயம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறுமியின் தந்தை உட்பட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.