டியூசன் வகுப்புகளை இடைநிறுத்துமாறு மாநகர சபை அறிவுறுத்தல்!
தற்போது நிலவும் காலநிலை சீர்கேட்டினால் ஏற்படக் கூடிய அனர்த்த அபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு மாணவர்களின் நலன்கருதி நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இரு தினங்களும் தனியார் கல்வி நிலையங்களில் டியூசன் வகுப்புகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தனியார் கல்வி நிலையங்களின் நடத்துனர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவித்திருப்பதாவது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் தாழமுக்க காலநிலை சீர்கேடு காரணமாக ஏற்படவுள்ள அனர்த்த அபாய நிலைமை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஆலோசனையின் பேரில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை, வெள்ளம், அதிக காற்று மற்றும் அனர்த்தங்களினால் எமது மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் மற்றும் அசெளகரியங்களை முழுமையாக தவிர்த்து அவர்களது நலன்கள் மற்றும் பாதுகாப்புக்கு நாம் பொறுப்புக் கூற கடமைப்பட்டிருக்கிறோம்.
ஆகையினால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் மேற்படி இரு தினங்களும் டியூசன் வகுப்புகளை இடைநிறுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு அவற்றின் நடத்துனர்கள் மற்றும் ஆசிரியர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.