
ஜப்பானிய அரசாங்கத்திடம் உதவி கோரினார் சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய தூதூவர் அகியோ இசமோட்டாவுக்கும் (Akio Isamota) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போது இலங்கை எதிர்கொள்ளும் பேரிடர் நிலைமை குறித்து இரு தரப்பினரும் நீண்ட கருத்துக்களை இங்கு பரிமாறிக் கொண்டனர். சிறப்பு மதிப்பீடு மற்றும் நிவாரணக் குழுக்களை ஜப்பான் இலங்கைக்கு அனுப்பி வைத்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார்.
அதேபோல், கடந்த காலங்களில் இலங்கை இதுபோன்ற பேரழிவுகளை எதிர்கொண்டபோது ஜப்பான், ஒரு நீண்டகால நண்பராக, இலங்கையைத் தனிமைப்படுத்தாது போல், இம்முறையும் இலங்கைக்குத் தேவையான ஆதரவைப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் கௌரவத்துடன் கேட்டுக் கொண்டார்.
சேதமடைந்த வீதிகளை நவீனமயமாக்கவும், ரயில் போக்குவரத்துப் பாதைகள் கட்டமைப்புகளைப் புனர்நிர்மாணம் செய்வதற்கும் ஜப்பானிய அரசாங்கத்தின் விசேட நிபுணத்து அறிவையும், தொழில்நுட்ப ஒத்துழைப்புகளையும் படிமுறையாக இலங்கைக்குப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
