சொத்து விபரங்களை வருடாந்தம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்!
அரசியல்வாதிகள் உட்பட உயர் பதவிகள் வகிக்கும் அனைவரும் தமது சொத்து விபரங்களை
வெளிப்படுத்த வேண்டும் என்றும் வருடாந்தம் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட
வேண்டும் என்று நேற்று புதன்கிழமை ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில்சமர்ப்பித்து உரையாற்றும் போது நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இது தொடர்பில் மேலும் “2022 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து ஊழல் எதிர்ப்பு சட்டத்தை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துறைசார் மேற்பார்வை குழு கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் இறுதியான தீர்மானத்தை எடுக்க
முடியவில்லை.
இதற்கமைய நேற்று புதன் கிழமை சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து கட்சி
தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இரு நாள்
விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள்,பொலிஸ் அதிகாரிகள்
நியமிக்கப்படுவது குறித்து மக்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்து காணப்படுகிறது.ஆகவே ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக அமைக்கப்படும் புதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் 62 வயதை அண்மித்து, துறைசார் நிபுணத்துவத்தை கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.
நிதி சுயாதீனம், பரிபாலனம் ஆகிய விடயங்களில் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட
வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதி, ஆணைக்குழுக்களின் தலைவர்கள், தூதுவர்கள், ஆளுநர்கள், அரசியல்வாதிகள் உட்பட உயர் பதவிகள் வகிக்கும் அனைவரும் தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.
வருடாந்தம் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். சொத்து விபரங்களை
வெளிப்படுத்தும் சட்டம் இந்த ஊழல் எதிர்ப்பு சட்டத்தால் வலுப்படுத்தப்படும்.அரச அதிகாரி
ஒருவர் வருடாந்த சொத்து விபரத்தை வெளிப்படுத்தாவிடின் முதல் கட்டமாக அவரது ஒருமாத
சம்பளம் ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்படும், அதனை தொடர்ந்து அறிக்கை
சமர்ப்பிக்கபடாவிடின் அவரது ஆறுமாத கால சம்பளம் இடைநிறுத்தப்படும், மூன்றாவது கட்டமாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில்
உள்வாங்கப்பட்டுள்ளது. அரச அதிகாரி ஒருவர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னரும் இரண்டாண்டு காலத்துக்கு சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்கள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு
உள்ளாகுகிறார்கள்.ஆகவே பாலியல் சீண்டல்கள் ஊழல் குற்றம் என்று இந்த சட்டமூலத்தில்
உள்வாங்கப்பட்டுள்ளது.இந்த சட்டமூலம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் சாதகமான திருத்தங்களை முன்வைத்தால் அதனை வெளிப்படை தன்மையுடன் செயற்படுத்துவோம்.
ஆசியாவில் மிக சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அதற்கான ஆரம்பமே இது” என்று தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்