சுவிட்சர்லாந்து விஸ்ப் (Visp) பகுதியில் தீ விபத்து : இருவர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்து வலே மாநிலம் விஸ்பியில உள்ள பிரதான வீதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 2:20 மணியளவில் விஸ்பியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக மாநில பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக விஸ்ப் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

குடியிருப்பு கட்டிடத்தின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், புகை கட்டிடத்தின் மற்ற தளங்களுக்கும் பரவியது, இதையடுத்து சுமார் 20 பேர் வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக உள்ளக விளையாட்டு அரங்கில் தங்க வைக்கப்பட்டனர். பலர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தீ விபத்திற்கு உள்ளான வளாகத்திற்குள் நுழைந்தபோது, ஒரு நபர் உயிரற்ற நிலையில் காணப்பட்டார். மற்றொருவர் கடுமையான புகை சுவாசத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்புப் பணியாளர்களால் ஆபத்தான நிலையில் விஸ்பியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

தீ விபத்தினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது . தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான சூழ்நிலையை கண்டறிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையை தொடங்கியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்