சுவிட்சர்லாந்தில் வெடிப்புச் சம்பவம் : குறைந்தது 10 பேர் உயிரிழப்பு!
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற ‘கிரான்ஸ்-மொன்டானா’ பனிச்சறுக்கு சுற்றுலாத் தளத்தில் உள்ள மதுபான விடுதியொன்றில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த நிலையில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 அளவில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளிகளில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த உணவகம் தீப்பற்றி எரிவதைக் காண முடிகிறது.
கிரான்ஸ்-மொன்டானா பகுதி தற்போது முழுமையாக மூடப்பட்டு, வான்வழிப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான தகவல்களை வழங்குவதற்காக விசேட உதவி மையத்தை (+41 848 112 117) பொலிஸார் அமைத்துள்ளனர்.
சம்பவத்தின்போது சுமார் 300 பேர் குறித்த மதுபான விடுதியில் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தின் தலைநகரான பேர்ண் நகரிலிருந்து சுமார் இரண்டு மணிநேரப் பயண தூரத்தில், ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மத்தியில் இந்த ஆடம்பர பனிச்சறுக்கு சுற்றுலாத் தளம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
