சுவிட்சர்லாந்தில் ஏரியில் மூழ்கி 22வயது இளைஞன் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்து வலே மாநிலம், சியோன் பகுதியில் உள்ள லெஸ் ஐல்ஸ் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை, இடம்பெற்ற நீச்சல் விபத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

சியோனில் உள்ள டொமைன் டெஸ் ஐல்ஸ் ஏரியில் நண்பர்களுடன் குறித்த இளைஞன் நீந்தச் சென்றுள்ள நிலையில், திடீரென காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கரையில் இருந்த மூன்றாவது நபர் உடனடியாக மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

வாலாய்ஸ் மாநில பொலிஸ் பிரிவினர், வாலாய்ஸ் மீட்பு அமைப்பின் நீர்முழ்கி மீட்புப்பிரிவினர் மற்றும் சியோன் தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இரவு 9:30 மணியளவில், மீட்புப் பணியாளர்கள் உயிரற்ற உடலைக் கண்டுபிடித்து ஏரியில் இருந்து மீட்டனர்.

உயிரிழந்தவர் 22 வயது செர்பிய நாட்டவர் எனத் தெரியவருகின்றது. விபத்துக்கான சரியான காரணங்கள் தெரியவரவில்லை, அரசு வழக்கறிஞர் அலுவலகம் மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளது.