சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட தற்கொலை இயந்திரம்
சுவிட்சர்லாந்தில் ’தற்கொலை இயந்திரம்’ முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. சார்கோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரம் விண்கலத்தைப் போன்ற உருவம் கொண்டுள்ளது. இந்த இயந்திரத்தின் உள்ளே படுத்துக்கொண்டு, ஒரு பொத்தானை அழுத்தினால், உள்ளிருக்கும் உயிர்வாழத் தேவைப்படும் ஒக்சிஜன் வாயுக்குப் பதிலாக, நைட்ரஜன் வாயு நிரம்பி, உடலில் ’ஹைபோக்சியா’ பாதிப்பு ஏற்பட்டு எந்த வலியுமின்றி உயிர் பிரியும் என்று இதனை வடிவமைத்த ‘லாஸ்ட் ரெசார்ட் நிறுவனம்’ தெரிவித்துள்ளது.
மேலும், சுவிட்சர்லாந்தில் இதற்கான சட்டப்பூர்வ அனுமதி இருப்பதாகவும், கடுமையான உடல் பாதிப்படைந்தவர்களை சட்டப்படி கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் இறப்பதற்கு 20 அமெரிக்க டொலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அத்துடன் இறக்க விரும்புபவர்களுக்கு குறைந்தது 50 வயது இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடுமையான உடல் குறைபாடு கொண்டிருந்தால் வயது அடிப்படையில் மறுப்பு ஏதுமின்றி இறக்க அனுமதிக்கப்படுவார்கள்” என லாஸ்ட் ரெசார்ட் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் ஃபியனா ஸ்டூவர்ட் தெரிவித்தார்.
இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவது குறித்து பல விவாதங்கள் எழுந்து வரும் வேளையில், “சார்கோ இயந்திரம் பயன்படுத்த சட்டப்பூர்வமாக எந்தத் தடையும் இல்லை என்பது எங்கள் புரிதல். இதில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் கொடிய ஆயுதம் இல்லை. அது காற்றில் 78% கலந்துள்ளது. நாங்கள் மருத்துவர்கள் உதவியின்றி கருணைக் கொலைகளை செய்ய முயற்சிக்கிறோம். ஒரு ஆண்டு காலமாக இந்த இயந்திரத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், மனிதர்களோ, விலங்குகளோ சோதனைக்குப் பயன்படுத்தப்படவில்லை” என்று ஸ்டூவர்ட் மேலும் கூறினார்.
முப்பரிமாண முறையில் இந்த இயந்திரத்தை உருவாக்க 650000 யூரோக்கள் செலவானதாகவும், நெதர்லாந்தில் 12 ஆண்டுகளாக இதனை ஆராய்ச்சி செய்து உருவாக்கியதாகவும் அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தை 5 அடி 8 அங்குலம் உயரமுள்ள நபர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், தம்பதிகளுக்கு ஏற்ற தற்கொலை இயந்திரங்களை அடுத்து வடிவமைக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மரண தண்டனைகளுக்கு இந்த இயந்திரம் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்று லாஸ்ட் ரெசார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்