சுகாதாரம் பொருளாதார மேம்பாட்டை முன்னிறுத்தி நடைபெற்ற அன்னையர் ஆதரவு குழு கூட்டம்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய, கல்முனை பிராந்திய தாய் சேய் நலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் பி.ஜி.பி. டானியலின் ஏற்பாட்டில் “அன்னையர் ஆதரவு குழு கூட்டம்” இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.]
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது விவசாய விரிவாக்கம் காரியாலய விவசாய போதனாசிரியர்களினால் வீட்டுத்தோட்ட செய்கையின் மூலம் குடும்பங்களின் வருமானத்தை உயர்த்துவது மட்டுமல்லாது, ஆரோக்கியமான உணவையும் தங்கள் குடும்பத்திற்கு உற்பத்தி செய்து வழங்க முடியும் என்பதையும் தேவையான பயிர் வகைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதனையும் தெளிவுபடுத்தி அன்னையர் ஆதரவு குழு உறுப்பினர்களின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் வழிகளையும் சுட்டிக்காட்டினர்.
மேலும் சுயதொழில்களை ஊக்குவிக்கும் வழிகாட்டல்கள், சிறு அளவிலான தொழில் முயற்சிகள், மற்றும் பெண்கள் தன்னம்பிக்கையுடன் சமூக முன்னேற்றத்தில் பங்கு எடுக்க வேண்டிய அவசியம் போன்றவை குறித்து முக்கியமான வழிகாட்டல்கள் இதன்போது வழங்கப்பட்டதுடன் “வீட்டுத்தோட்டம் என்பது ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இரட்டை பலன்களை வழங்கும் சிறந்த வழி, வீட்டில் காய்கறி, பழம், கீரை போன்றவற்றை வளர்ப்பதன் மூலம் சத்தான உணவைப் பெற முடியும். இதுவே குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறந்த வழிமுறையாகும்.” என்பது பற்றியும் விளக்கங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன், “அன்னையர் ஆதரவு குழுக்கள் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் வலிமையான தளம். தாய்மார்கள் தங்கள் திறமைகளையும் முயற்சிகளையும் கொண்டு சுய நம்பிக்கையுடன் பொருளாதார வளர்ச்சியையும், குடும்ப ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இக் கூட்டத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 9 அன்னையர் ஆதரவு குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
