சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து எல்லாவற்றையும் எதிர்த்தால் நான் எதுவும் செய்ய முடியாது

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு-கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான் புலிபாய்ந்தகல் கிராமிய பாலம் திறப்புவிழா மற்றும் புலிபாய்ந்தகல் வீதிக்கு கிறவல் இட்டு செப்பனிடுதல் போன்ற நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது .

கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இப் பாலம் உடைப்பு எடுத்து போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டதனால் விவசாயிகள், பால் பண்ணையாளர்கள், அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் சிரமபட்டார்கள்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனால் பாலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு,  23.26மில்லியன் செலவில் புதியதாக அமைத்த பாலம் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் கிரான் பாலம் தொடக்கம் புலிபாய்ந்த கல் வரையான வீதிக்கும் கிறவல் போட்டு அதனையும் செப்பனிடும் பணியினையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பொது மக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர்,

இப் பாலத்தினை உறுதியாக அமைத்து கொடுப்பதில் பல காலம் முயற்சி எடுத்தும் முடியாமல் உள்ளதாகவும்,  தான் முதலமைச்சராக இருந்து போது இப் பாதையானது கிரான் சந்தி தொடக்கம் கிரான் பாலம் மட்டும் தான் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு இருந்தது என்றும் ஏனைய வீதிகளை வர்த்தமானி வெளியிடுவதற்கு பல ஆண்டுகள் சென்றதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், உலக வங்கி திட்டத்தில் முறுத்தானை வரைக்கும் அதேபோல் மியான்கல் வரைக்கும் வீதிகளை அபிவிருத்தி செய்வதாகவும் கச்சான் சீசன் முடிவதற்குள் மாவடியோடை பாலத்தினை கழற்றி கொண்டு மூக்குறையான் ஆற்றுக்கு பாலம் போட்டு அதனுடாக பேருந்து சேவையினை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், மகாவலி என்று கூறுகின்றேன் அதை பற்றி சொன்னால் எமது மாவட்டத்தில் உள்ள முக்கியஸ்தர்கள், புத்திஜீவிகளுக்கே சரியான அறிவு இல்லை பணத்தினை கொண்டு வங்கியில் வைப்பிலிட்டு முடக்காமல், நாமும் 50,100 ஏக்கர் காணிகளை எடுத்து கச்சான், சோளம், அரிசி ஆலைகள், நெல் உலர்த்த தேவையான களங்களை அமைப்பதற்கும், வேறு ஏதும் தொழில் வாய்ப்பினை வழங்க கூடிய எவர் வந்தாலும் முடியுமான வரை காணிகளை வழங்குங்கள் என பிரதேச செயலாளரை பணித்தார்,  அத்துடன் முடியுமானோர் தங்கள் பதிவுகளை இப் பகுதிக்கு மாற்றுங்கள் என்றும் மாகவலி காணி பிரிப்பு வரும்போது நம்மவர் இல்லா விட்டால் யாருக்கு காணி வழங்குவது? இப் பகுதியில் உள்ள மக்கள் தொகையினை பாருங்கள்.

சில அரசியல் வாதிகளுடன் சேர்ந்து எல்லாவற்றையும் எதிர்ப்போம் என்று இருந்தால் நான் எதுவும் செய்ய முடியாது , காணி அற்றோருக்கு காணி வழங்கும் அதிகாரம் மாகவலிக்கு உள்ளது என்றும் நாங்கள் அரச பிரதிநிதி என்ற வகையில் அவர்களின் முடிவை இப்படி செய்யுங்கள் என கூற முடியும்.

மேய்ச்சல் தரை என கூறுகின்றோம் மேய்ச்சல் தரைக்கு 37000 ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்க முடியும் என மகாவலி கூறுகின்றது ஐந்து இலட்சம் மாடுகள் வளர்க்க இவ் ஆயிரம் ஏக்கர் போதாது நாம் இன்று எத்தனையாயிரம் மாடுகளை பதிவு செய்து வைத்துள்ளோம். ஒரு ஏக்கர் நிலத்தில் பத்து மாடுகள்தான் மேய முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன இது தொடர்பில் நீங்கள் மக்களை தெளிவு படுத்த வேண்டும்.

மேலும் மாவட்டத்திற்கு தொழில் துறைகள் உருவாக்க வேண்டும் என்றும், வர்த்தகத்தில் எமது இளைஞர்கள் ஈடுபட வேண்டும் எனவும், யுத்தத்தின் மூலம் ஒரு தலைமுறையினர் அழிந்து விட்டனர் எனவும் , அதற்கு பின் வந்தோர் அரபு நாடுகளில் உள்ளனர் அந் நாடுகள் எல்லாம் அடுத்த கட்ட தலைமுறைக்கு ஏற்ப பொருளாதாரம் பற்றி சிந்திக்கின்றது .

2004. ம் ஆண்டு இருந்தது போல் தொழில் துறைகள் இனி வரப்போவது இல்லை! உலகரீதியில் பல போட்டிகள் வந்து உள்ளது 45% சனத்தொகை மக்களை கூட்டாக கொண்டு தனியான வங்கி கட்டமைப்பு நிதி மூலதனம் பற்றி சிந்திக்கின்ற காலம்  உலகத்தில் நடந்து கொண்டிருக்கையில், எமது மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் தொழில் துறைகளுக்கு நாம் என்ன செய்யபோகின்றோம் என வினவினார்.

இந் நிகழ்வில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் சு.ராஜ்பாபு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர்கள் பொ. பரதன், அ.லிங்கேஸ்வரன் மற்றும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அமைச்சரின் இணைப்பு செயலாளர், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்