
சிஐடியில் தம்மரதன தேரர் – அமைச்சர் லால்காந்தவுக்கு எதிராக முறைப்பாடு!
மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி வணக்கத்திற்குரிய வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரர், இன்று செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி விசேட முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.
விவசாய, நீர்ப்பாசன மற்றும் காணி அமைச்சர் கே.டி. லால் காந்த, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி தேரருக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் அவதூறு பரப்பி வருவதாக தேரரின் சட்டத்தரணி குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் தேரரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் சமூக வலைத்தள இணைப்புகள் (Links) ஆகியவற்றை இதன்போது அதிகாரிகளிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.
இது தனிப்பட்ட ரீதியிலான முறைப்பாடு அல்ல என்றும், பௌத்த சாசனத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தமக்கு எதிராக வெளியிடப்படும் காணொளிகளால் தாம் ஒருபோதும் சோர்வடையப் போவதில்லை என தம்மரதன தேரர் தெரிவித்தார்.
நாடு மற்றும் மதத்தின் மீதான கடமையை நிறைவேற்றவே தாம் இங்கு வந்ததாக அவர் வலியுறுத்தினார்.
அத்துடன் அமைச்சர் லால் காந்த பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டால், அவரை மன்னிக்கத் தயாராக இருப்பதாகக் கூறிய தேரர், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் ஒரு பொது அதிகாரி பொறுப்புடன் நடக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.
