
சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!
2025ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடித்தல்) கட்டளையை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததுடன், இதன் காரணமாக உரிய தினத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்வதில் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
அத்துடன், அக்காலப்பகுதியில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகித்தல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அந்த சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாமல் போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டும், வீதிப் பாதுகாப்பு அல்லது வீதியைப் பயன்படுத்துவோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், 2025 நவம்பர் 25 முதல் 2025 டிசம்பர் 24 வரையான காலப்பகுதியில் செல்லுபடியாகும் காலம் காலாவதியாகவிருந்த சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை, அவை காலாவதியாகும் திகதியிலிருந்து ஒரு மாத காலத்திற்கு நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2025 டிசம்பர் 17ஆம் திகதியிடப்பட்ட 2467/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இக்கட்டளை பிரசுரிக்கப்பட்டுள்ளது.
(203 ஆம் அதிகாரச் சட்டமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க, குறித்த கட்டளையைப் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கும் பொருட்டு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
