
சாணக்கியனின் குற்றச்சாட்டை நிராகரித்த பிரதி அமைச்சர்!
மதுபான உற்பத்தி உரிமம் குறித்து விவாதிக்க கிங்ஸ்பரி உணவகத்தில் ஒரு தொழிலதிபரை சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நிராகரித்தார்.
நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பிய பிரதி அமைச்சர் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் கருத்துக்களால் தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதற்கு சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இவ்விடயம் தொடர்பில் பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,
“பொது அதிகாரிகளாக, நாங்கள் தினசரி அடிப்படையில் முதலீட்டாளர்களையும், சாத்தியமான முதலீடுகளில் ஆர்வமுள்ள தனிநபர்களையும் அடிக்கடி சந்திப்போம்.
இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பட்டது போல விவாதம் ஒருபோதும் நடக்கவில்லை, மேலும் எனக்கு அப்படி ஒரு கடிதம் ஒருபோதும் வரவில்லை.
யூடியூப்பில் தோன்றும் விடயங்களை பிரபலப்படுத்த நாடாளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம் என உறுப்பினர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.
அத்தோடு, ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டு வந்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவே தான் அரசியலில் நுழைந்ததாக பிரதி அமைச்சர் மேலும் கூறினார்.
“நாங்கள் இந்த நிறுவனத்தின் நேர்மையைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வணிக ஆர்வமுள்ள எவரையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழிநடத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்தக் கூற்றுக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், பிரதி அமைச்சரின் கருத்துகள் தனிப்பட்ட அறிக்கையா அல்லது சிறப்புரிமைக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய விடயமா என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன் இந்த விவகாரத்தை விசாரிக்கவும், சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்யவும், தொடர்புடைய கடிதத்தை மறுபரிசீலனை செய்யவும் நான் அரசாங்கத்தை வலியுறுத்தினேன் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பிரதி அமைச்சர் தனிப்பட்ட அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் பொறுப்புக்கூறலைத் தவிர்க்கக்கூடாது, என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்த வார தொடக்கத்தில், பிரதி அமைச்சர் அபேசிங்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திகவும் கிங்ஸ்பரி உணவகத்தில் தொழிலதிபர் ஒருவரை சந்தித்து, மதுபான உற்பத்தி உரிமம் குறித்து விவாதித்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்தே, நாடாளுமன்றில் இந்த வாத விவாதங்கள் இடம்பெற்றன.
