சனியால் மோசமான பலனை பெறும் ராசிகாரர்கள் இவர்கள்தான் பரிகாரம் செய்தால் தப்பிக்கலாமா
சனி பகவான் இடப்பெயர்ச்சி அடைவது மிகப்பெரிய அளவில் தாக்கம் அளிக்கக்கூடிய கிரகப் பெயர்ச்சி ஆகும். எனவே, குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே அதனுடைய தாக்கம் தெரியத் தொடங்கும்.
சனி பகவான் வரும் 29ஆம் திகதி (29.03.2025) கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை வருட காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். (வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது).
சனிப்பெயர்ச்சி என்றால் பலரும் பயப்படுவதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. சனிப்பெயர்ச்சி என்றவுடன் யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சனி பகவான் சஞ்சாரம் செய்யும் இரண்டரை ஆண்டுகளில் ராகு, கேதுக்கள் இரண்டு முறையும், குரு பகவான் மூன்று முறையும் பெயர்ச்சியாகிறார்கள்.
இந்த மூன்று கிரகங்களின் பெயர்ச்சியும் இணைந்தே ஒரு ஜாதகத்தின் பலனை நிர்ணயிக்கின்றன. ஒரு கிரகம் அசுப பலனை வெளிப்படுத்தினால் இன்னொரு கிரகம் சுப பலனைத் தரும். மேலும் சுய ஜாதக ரீதியான தசா புத்தி சாதகமான நிலையில் இருந்தும் கோட்சார கிரகங்களும் சுப பலனை தரும். தசா புத்தி சற்று ஏற்ற இறக்கமாக இருந்தால் கோட்சார கிரகங்கள் அசுப பலனை வழங்கும். அரச மர விநாயகர் வழிபாடு அனைத்து வித இன்னல்களையும் நீக்கும்.
பரிகார ராசிகள் :- சிம்மம் – அஷ்டமச் சனி , கன்னி – கண்டகச் சனி ,தனுசு – அர்தாஷ்டமச் சனி ,கும்பம் – பாதச் சனி ,மேஷம் – விரசயச் சனி
அனுகூல ராசிகள் :– ரிஷபம் – இலாபச் சனி , துலாம் – ரோக ஸ்தான சனி ,மகரம் – சகாய ஸ்தான சனி
மத்திம ராசிகள் :- மிதுனம் – கர்மச் சனி ,கடகம் – பாக்கியச் சனி , விருச்சிகம் – பஞ்சம சனி
மேஷம்
சனிபகவான் உங்கள் ராசிக்கு பத்து மற்றும் பதினொன்றாம் இடத்துக்கு உரியவர். அவர் இப்போது 12ஆம் இடத்துக்கு வருகிறார். இது உங்களுக்கு ஏழரை சனியின் தொடக்கம். அதேசமயம், உங்கள் ராசியில் சனிபகவான் நீசம் அடையக்கூடியவர். இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டம், உங்களுக்கு பலவகையிலும் அல்லவை விலகி நல்லவை அதிகரிக்கும் காலகட்டமாகவே இருக்கும். அதேசமயம், எதிலும் திட்டமிடல் நல்லது. பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். திட்டமிடலும் நேரடி கவனமும் இருந்தால் நன்மைகள் தொடரும் மேலதிகாரிகள் ஆதரவு மகிழ்ச்சி தரும். பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடிவரத் தொடங்கும். கழுத்து, தலை, முக உறுப்பு உபாதைகள் வரலாம். தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வது முக்கியம்.சனிப்பெயர்ச்சி காலகட்டம் முழுக்க இயன்ற முருகனைக் கும்பிடுவது சிறப்பு.
சிம்மம்
சனிபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்துக்கும் ஏழாம் இடத்துக்கும் உரியவர். அவர் இப்போது 8ஆம் இடத்துக்கு வருகிறார். இது உங்களுக்கு அஷ்டம சனியின் காலகட்டம். நாவடக்கத்துடன் இருந்தால் நன்மைகள் ஏற்படக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். அதேசமயம், உடனிருப்போர் யாருடனும் வீண் தர்க்கம் வேண்டாம். அயல்நாட்டுப் பணிவாய்ப்பில் முழுமையான விதிக்கட்டுப்பாடு அவசியம். சிலருக்கு புதிய பணிவாய்ப்பு அமையும். அதில் நிதானம் முக்கியம். இரவு நேரப் பயணத்தில் வழியில் இருட்டில் தனியே இறங்க வேண்டாம்..தூக்கமின்மை, மன அழுத்தம், தலைவலி, முக உறுப்பு உபாதைகள் ஏற்படலாம். இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டம் முழுக்க, இஷ்ட மகான் வழிபாடு, இனிமை சேர்க்கும்.
கன்னி
சனிபகவான் உங்கள் ராசிக்கு ஐந்து மற்றும் ஆறாம் இடத்துக்கு உரியவர். அவர் இப்போது 7ஆம் இடத்துக்கு வருகிறார். 7ஆம் இடம் என்பது களத்திர ஸ்தானம். பணியிடக் கஷ்டங்கள் படிப்படியாக நீங்கத் தொடங்கும் . உங்கள் திறமைக்கு ஏற்ப பதவி, அந்தஸ்து உயரும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். அதேசமயம், மறைமுக எதிரிகள் பலம் அதிகரிக்கலாம். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். யாருக்கும் வாக்குறுதி எதுவும் தரவேண்டாம். இல்லத்தில் இன்சொல் பேசினால், இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுவது முக்கியம். சுளுக்கு, பல், மூட்டு உபாதைகள் வரலாம். இந்தக் காலகட்டம் முழுக்க, அனுமன் வழிபாடு அநேக நன்மை தரும்.
தனுசு
சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் இடத்துக்கு உரியவர் அவர் இப்போது நான்காம் இடத்துக்குச் செல்கிறார். இதனை அர்த்தாஷ்டம சனி என்பார்கள். திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்பட்டால், அலுவலகத்தில் அனுகூலக்காற்று வீசத்தொடங்கும். உடனிருப்போர் ஆலோசனைகளை அலட்சியம் செய்ய வேண்டாம். தாமதமானாலும் பொறுமையாக இருந்தால் நிச்சயம் உயர்வுகள் வரும். பணியிட ரகசியங்களைப் பிறரிடம் பகிர வேண்டாம். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிடுவது கூடாது. வீட்டில் நிம்மதியான சூழல் நிலவும். பயணத்தில் போதுமான ஓய்வு மிக முக்கியம். இரத்த அழுத்த மாறுதல்,பரம்பரை உபாதைகள், ஹார்மோன் பிரச்னைகள் வரலாம். இந்தக் காலகட்டத்தில் நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.
கும்பம்
சனிபகவான், உங்கள் ராசிக்கும், பன்னிரண்டாம் இடத்துக்கும் உரியவர். அவர் இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ஜன்ம ராசியில் இருந்து விலகி, பன்னிரண்டாம் இடத்திற்குச் செல்கிறார் இது ஜன்ம சனி விலகி பாத சனி தொடங்கும் காலகட்டமாகும். இத்தகைய அமைப்பு காரணமாக இந்தக் காலகட்டம் உங்களுக்கு நிதானம், நேர்மைக்குப் பரிசாக நிம்மதியைத் தருவதாக இருக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். எந்த சமயத்திலும் நேரடி கவனமும் நேரம் தவறாமையும் இருந்தால், திறமைக்கு உரிய உயர்வுகளை நிச்சயம் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். பயணத்தில் அவசரம் கூடாது. வயிறு,எலும்பு,மூட்டு, இரத்தநாள உபாதைகள் வரலாம். இந்தக் காலகட்டம் முழுக்க, பைரவர் வழிபாடு செய்வது வாழ்வை பசுமையாக்கும்.
மீனம்
சனிபகவான் உங்கள் ராசிக்குப் பதினோறாம் இடத்துக்கும் பத்தாம் இடத்துக்கும் உரியவர். அவர் இப்போது உங்கள் ராசிக்கு, அதாவது ஜன்ம ராசியான மீனத்துக்கே வருகிறார். இத்தகைய கிரஹ அமைப்பின் காரணமாக இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு கவனமாக இருந்தால், களிப்பு நிறையும் காலகட்டமாக இருக்கும். வீண் ரோஷம் தவிர்த்தால், அலுவலகத்தில் அனுகூலக்காற்று வீசத்தொடங்கும். உடனிருப்போர் ஆலோசனைகளை அலட்சியம் செய்ய வேண்டாம். உழைப்பில் சலிப்பு தவிர்த்தால், நிச்சயம் உயர்வுகள் வரும். பணியிட ரகசியங்களைப் பிறரிடம் பகிர வேண்டாம். வீட்டில் நிம்மதியான சூழல் நிலவும். ரத்த பந்த உறவுகளால் பெருமை சேரும். ரத்த அழுத்த மாறுதல், பரம்பரை உபாதைகள், ஹார்மோன் பிரச்னைகள் வரலாம்.விநாயகர் வழிபாடு விசேஷ நன்மைகள் தரும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் எள் தீபம் போடுவதன் மூலமும், தானம் செய்வதன் மூலமும் சனியின் அருளை பெறலாம். மேலும் சனியின் நாமம், சனியின் ஸ்லோகம் சொல்வதாலும் சனியின் வக்ரியில் இருந்து தப்பிக்கலாம்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்