சந்தனவெட்டையில் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

திருகோணமலை மாவட்டம், மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை கிராமத்தில், கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் – திருகோணமலை சார்பில் நேற்று சனிக்கிழமை நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் கீழ் சந்தனவெட்டை கிராமத்தைச் சேர்ந்த 122 குடும்பங்களுக்கும், மேலும் அயல் கிராமங்களைச் சேர்ந்த 05 கிராம குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபா 3,250.00 பெறுமதியுள்ள நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.

நிவாரணப் பொதிகளில் 10 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சீனி, 1 பாக்கெட் சோயா மீட் மற்றும் 150 கிராம் தேயிலை ஆகியவை அடங்கியிருந்தன.நிதி உதவி கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் ஊடாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் தலைவரும் கிழக்கு மாகாண இணைப்பாளருமாகிய சுந்தரமூர்த்தி தீபராஜ் தலைமையில் உறுப்பினர்களான டிலக்சன், சு. சயனராஜ், செ.ரேகா, அ.லோஜி ஆகியோரும், சமூக செயற்பாட்டாளர்களான இராசதுரை, ஓய்வு நிலை அதிபர் சிறிதரன் மற்றும் ரபிசன் ஆகியோரும் பங்குபற்றினர்.

பயனாளி தெரிவு மற்றும் நிவாரணப் பொருட்கள் விநியோக ஏற்பாடுகள் சந்தனவெட்டை கிராம அபிவிருத்தி சங்கம் மூலம் மேற்கொள்ளப்பட்டதுடன், கிராம சேவையாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்புடன் இந்நிவாரணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன.

மேலும், இந்நிவாரண உதவி கிராமத்தில் உள்ள அனைவருக்கும் எந்தவித பாகுபாடுமின்றி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர், கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.