கொழும்பு முன்பள்ளி ஆசிரியர்களின் வேதனம் அதிகரிப்பு

கொழும்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் மாதாந்த வேதனத்தை 10,000 ரூபாவால் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இந்த வேதன உயர்வு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் 20,000 ரூபாவாக இருந்த முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த வேதனம், இனிவரும் காலங்களில் 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

அதேவேளை, கொழும்பு மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து மதங்களையும் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட அறநெறி பாடசாலைகளுக்கு வழங்கப்படும் மாணவர்களுக்கான காலை உணவு கொடுப்பனவு, 60 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நகரிலுள்ள ஆசிரியர்களை ஊக்குவிப்பதற்கும், மாணவர்களுக்கான நலன்புரி உதவிகளை மேம்படுத்துவதற்குமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.