கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கு வைத்திய பீட மாணவர் சேர்க்கை

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நடைமுறைகள் தொடர்பான பரிந்துரைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பரிந்துரைகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளன.

குறித்த குழுவில், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவா மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்திற்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பான 10 பரிந்துரைகளை இந்தக் குழு சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரிந்துரைகளின் படி, வருடத்திற்கு ஒரு தொகுதி வைத்திய பீட மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சேர்த்துக் கொள்ளப்படும் மொத்த வைத்திய பீட மாணவர்களின் எண்ணிக்கையை 150 ஆக மட்டுப்படுத்துவதுடன், கட்டணம் செலுத்தும் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படும் அதிகபட்ச உள்ளூர் சிவில் வைத்திய பீட மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், வைத்திய பீட மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் வரிசையில் முப்படை மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் உள்ளூர் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவ சபையால் தீர்மானிக்கப்பட்டபடி, வைத்திய பீட மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான அளவுகோலாக குறைந்தபட்சம் 1.4000 அல்லது அதற்கு மேற்பட்ட Z- புள்ளிகள் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சேர்த்துக் கொள்ளப்படும் உள்ளூர் சிவில் வைத்திய பீட மாணவர்களின் ஒவ்வொரு தொகுதியிலும் பத்து சதவீதம் பேர் முழு உதவித்தொகையில் சேர்த்துக் கொள்ளப்படுவதுடன், இந்த மாணவர்கள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் வலியுருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்கள் திறந்த பல்கலைக்கழகம் தவிர வேறு அரச பல்கலைக்கழகங்களில் முழுநேர உள் மாணவர்களாக பதிவு செய்யப்படுவதற்கும், திறந்த பல்கலைக்கழகம் தவிர வேறு அரச பல்கலைக்கழகங்களில் முழுநேர உள் மாணவர்களாக பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பதிவு செய்ய முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடநெறியில் பங்கேற்கும் சிவில் மாணவர்களுக்கு சிறப்பு சீருடை கட்டாயமாக இருக்காது என்பதுடன், பிற வைத்திய பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளில் கலந்துகொள்வது போலவே அவர்களுக்கு விரிவுரைகளில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களுக்கு வைத்திய பயிற்சியின் தகுதிக்கு ஏற்ப சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஊடாக வைத்தியசாலைகளை குறிப்பாகத் தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்கும் என்பதும் பரிந்துரைகளில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களை அரசாங்க வைத்தியசாலைகளில் இணைப்பதற்கு கொத்தலாவல பல்கலைக்கழகம் எந்தப் பொறுப்பையும் ஏற்காது என்பதுடன், அத்தகைய ஆட்சேர்ப்பில், நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய மாத்திரம் மேற்கொள்ளப்படும் இணக்கம் மாணவர்களின் பதிவின் போது பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கீழ் வைத்திய பீட கல்வி பணிக்குழாமில் பணியாற்றிய அதிகாரிகள், அந்த ஊழியர் சேவையை விட்டு வெளியேறி ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரே கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தின் கல்வி பணிக்குழாமிற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும், ஏழு ஆண்டு விடுப்பு மற்றும் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இந்த நிபந்தனை பொருந்தாது என்றும் குறித்த பரிந்துரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.