கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு – பொலிஸார் நீதிமன்றத்துக்கு விடுத்த அறிவிப்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் கட்டிடத்திலிருந்து குதித்து உயிரைமாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு இன்று திங்கட்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையை மேற்கொண்டு வரும் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் கொழும்பு வடக்கு பிரிவின் பொறுப்பதிகாரி, இந்த சம்பவம் தொடர்பாகக் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சிசிடிவி காட்சிகள் மேலதிக ஆய்வுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால் விசாரணை அறிக்கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக பலரது வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணி நடைபெற உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வைத்திய அறிக்கைகளையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட வாதங்களையும் ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, நீதவான் இந்த விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை செப்டம்பர் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.