குவாத்தமாலாவில் பேருந்து விபத்து: 15 பேர் உயிரிழப்பு

மேற்கு குவாத்தமாலாவில் உள்ள அமெரிக்கா இடையிலான நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் தீயணைப்புப் படையினரின் ஊடகப்பேச்சாளர் லியாண்ட்ரோ அமாடோ இது குறித்துக் கூறுகையில்,இந்த விபத்தில் 11 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் என மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த சுமார் 19 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள சொலோலா (Solola) மாகாணத்தில், நெடுஞ்சாலையின் 172 மற்றும் 174 கிலோமீட்டர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது.

இந்தப் பகுதி பொதுவாக அடர்ந்த மூடுபனி சூழ்ந்த இடமாகும். அதிகப்படியான மூடுபனி காரணமாக வீதித் தெளிவற்ற நிலை (Visibility) ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிரமத்திற்குள்ளாகும் இடமாக இது அடையாளம் காணப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை தீயணைப்புத் துறையினரால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், பேருந்து சிதைந்த நிலையில் பள்ளத்தில் கிடப்பதையும், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் காட்சிகளையும் காண முடிந்தது.