காணி உறுதி பெற்றுத்தருவதாக கூறி 164 பேரிடம் பண மோசடி செய்த பெண் கைது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் நிரந்தர காணி உறுதியை பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்து, பெருமளவானோரிடம் 98,430,000 ரூபா நிதியை மோசடி செய்த வர்த்தகரான பெண் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பெண், மாணிக்கக்கல் மற்றும் காணி விற்பனை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் காணி உறுதி இல்லாது வருடக் கணக்கில் காணப்படும் குடும்பங்களுக்காக ‘உறுமய’வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மேற்படி வர்த்தகரான இப்பெண், இதனை பயன்படுத்திக் கொண்டு காணி உறுதியைப் பெற்றுக் கொடுக்கும் போர்வையில் 164 பேரிடம் 98,430,000 ரூபா நிதியை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாட்டுக்கு இணங்க அவர் மேற்படி திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 42 வயதான மேற்படி சந்தேக நபரை, குற்றவியல் தண்டனை சட்டக் கோவையின் 386/389மற்றும் 400 சரத்துகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்