காணாமல் போன இரண்டு சிறுவர்களும் சடலமாக மீட்பு!

கண்டி , தென்னகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் காணாமல்போயிருந்த நிலையில் அவர்கள் இருவரின் சடலங்கள் இன்று வெள்ளிக்கிழமை மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

08 ஆம் வகுப்பு மற்றும் 09 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 13 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் இருவர் புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என கண்டி பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சிறுவர்கள் இருவரும் புதன்கிழமை அன்று மகாவலி கங்கைக்கு செல்வதை கண்டதாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காணாமல்போன சிறுவர்களில் ஒருவர் மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மற்றைய சிறுவனின் சடலமும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவர்கள் இருவரும் மகாவலி கங்கையில் விளையாடிக்கொண்டிருக்கும் போது அங்கிருந்த மீனவர் ஒருவர் கங்கையின் நீர் மட்டம் அதிகமாக உள்ளதால் கங்கையில் நீராட வேண்டாம் என எச்சரித்தும், சிறுவர்கள் இருவரும் நீச்சல் தெரியும் என கூறி கங்கையில் தொடர்ந்து நீராடிக்கொண்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.