காசா நகரை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை ஆரம்பிப்பு

காசா நகரம் முழுவதையும் கைப்பற்றி ஆக்கிரமிக்கும் திட்டத்தின் கீழ், தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், காசாவின் புறநகர்ப் பகுதிகள் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

தாக்குதலுக்கான அடித்தளத்தை அமைக்க ஜெய்டவுன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் துருப்புக்கள் ஏற்கனவே செயலில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் அனுமதியை வழங்கியிருந்த நிலையில் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 60 ஆயிரம் மேலதிகப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

காசா நகரில் உள்ள இலட்சக்கணக்கான பலஸ்தீனர்கள் வெளியேறி, தெற்கு காசாவில் உள்ள தங்குமிடங்களுக்குச் செல்ல இஸ்ரேல் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம் அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான கொடூரமான போரை ஆரம்பிப்பதற்காகவே, இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்து வருவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேலின் பல நட்பு நாடுகள், காசாவை கைப்பற்றும் நடவடிக்கையை மீண்டும் கண்டித்துள்ளன.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், இது பொதுமக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்துவதுடன், முழு பிராந்தியத்தையும் நிரந்தர போரின் சுழற்சியில் தள்ளும் என எச்சரித்துள்ளார்.