கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் 204 வது கொடியேற்ற விழா

-அம்பாறை நிருபர்-

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் வருடாந்தம் இடம்பெறும் காரணக்கடல் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீது, செய்யித் அப்துல் காதிர் நாஹூரி மாணிக்கப்பூரி பாதுஷா நாயகம் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 204வது கொடியேற்று பெருவிழாவும் 460 வது மணாகிப் மஜ்லிஸும் இவ்வருடமும் 2025.11.21 வெள்ளிக்கிழமை முதல் 2025.12.03 வரை (ஹிஜ்ரி 1447 ஜமாஅதுல் ஆகிர் பிறை 01 தொடக்கம் பிறை 12 வரை) வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

கல்முனை முஹ்யித்தீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் விமர்சையாக இடம்பெறவுள்ளதுடன், கொடியேற்ற தின மான 2025.11.21 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணி மணிக்கு சந்தனம் பூசுதல் நிகழ்வும், காலை 8:00 மணிக்கு பெண்கள் தலைபாத்திஹா மஜ்லிஸும், பிற்பகல் 3:45 மணிக்கு மௌலித் மஜ்லிசுடன் கொடி ஊர்வலம் நடைபெற்று மாலை 5:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு நடைபெறவுள்ளது.

இங்கு தினமும் நாளாந்த நிகழ்வுகளாக கத்முல் குர்ஆன் மஜ்லிஸ், மீரான் சாஹிப் மௌலித் மஜ்லிஸ், றிபாயி றாத்திப் மஜ்லிஸ், சியாரத் மஜ்லிஸ், சன்மார்க்க பயான் மஜ்லிஸ், விஷேட இஸ்லாமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுகள் சங்கைக்குரிய சாதாத்மார்கள், உலமாக்கள், அறபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அகில இலங்கை பக்கீர் ஜமாஅத்தினரின் பங்குபற்றுதலுடன் இடம்பெறுவதோடு, இறுதித்தினமான 2025.12.03 புதன்கிழமை முஹர் தொழுகையின் பின்னர் மாபெரும் மந்தூரி அன்னதானம் வழங்கப்பட்டு, அன்றைய தினம் அஸர் தொழுகையுடன் கொடியிறக்கும் நிகழ்வும் இடம்பெறும்.

மேலும் 2025.12.04 வியாழக்கிழமை அகில இலங்கை பக்கீர் ஜமாஅத்தாரின் கத்தூரி நிகழ்வும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.