
கருத்துச் சுதந்திரத்தை அடக்க அவசரகால சட்டம் இல்லை! – ஜனாதிபதி
அரசாங்கத்தை நோக்கிய விமர்சனங்கள் அல்லது கருத்து சுதந்திரத்தை அடக்குவதற்கு அவசரகால சட்டங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதியமைச்சர் சுனில் வட்டகல அண்மையில் வெளியிட்ட கருத்துக்களால் எழுந்த கவலைகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி, அந்த கூற்று குறித்து “தேவையற்ற சலசலப்பு” ஏற்பட்டுள்ளதாகவும், அவசரகால சட்டத்தின் கீழ் மக்களின் கருத்துக்கள் ஒருபோதும் கட்டுப்படுத்தப்படாது என்றும் வலியுறுத்தினார்.
தன்னையோ அல்லது நிர்வாகத்தையோ இலக்காக வைத்து வரும் விமர்சனங்கள் அல்லது பாதகமான கருத்துக்களால் தான் கவலைப்படுவதில்லை என்றும், தேவைப்பட்டால் மானநஷ்டமான உள்ளடக்கங்களை (defamatory content) சமாளிக்க ஏற்கனவே உள்ள சட்டங்கள் போதுமானவை என்றும் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் ஒருபோதும் அவசரகால சட்டங்களை கருத்துக்கள் அல்லது அபிப்பிராயங்களை அடக்குவதற்குப் பயன்படுத்த மாட்டோம். தனிப்பட்ட முறையில் என்னை இலக்கு வைத்து மானநஷ்டமான கருத்துக்கள் வெளியிடப்பட்டால், முன்னர் கூறியது போல, அவை சாதாரண சட்டங்களின் கீழ் கையாளப்படும்,” என்றும் அவர் கூறினார்.
