கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின், மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளால், கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்டதை கண்டித்து, நீர்கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக, பாதிரியார்களும், அருட்சகோதரிகளும் இன்று செவ்வாய்க்கிழமை அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பாதிரியார் மற்றும் அருட்சகோதரிகள், தாக்குதலைக் கண்டிக்கும் விதமான வாசகங்களை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொட்டதெனியாவவில் உள்ள, தேவாலயத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு பண்ணையில் உதவி தோட்ட மேலாளராகப் பணியாற்றும் பாதிக்கப்பட்ட பாதிரியார், திப்பிட்டிகோடா தேவாலயத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டார்.
தாக்குதலுக்குள்ளாகிய நேரத்தில் அவர், மோட்டார் சைக்கிளில் பயணித்ததாகவும், மதகுரு உடையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள், பாதிரியாரைத் தாக்கி வீதியோரத்தில் விட்டுச் சென்றதாகவும், பின்னர் அவர் சிகிச்சைக்காக நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், பாதிரியார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6 பொலிஸ் அதிகாரிகள், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.





