கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றவர் மரணம்
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்ற யாத்திரீகர் ஒருவர் கதிர்காமத்தில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
புத்தளம் உடப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பொன்னம்பலம்( வயது – 52)என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமத்தைச் சென்றடைந்த பாதயாத்திரை குழுவில் இருந்த நபரே கதிர்காமத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த மே மாதம் 01 ஆம் திகதி உடப்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதிக்கு வந்து 56 நாள் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர் என பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக பாத யாத்திரை சென்ற குறித்த நபர் கதிர்காமத்தை வந்தடைந்த போது அவரது மனைவி பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் பேருந்தில் கதிர்காமம் வந்தடைந்துள்ளனர். குறித்த நபர் இன்று 11 மணியளவில் குடும்பத்தினருடன் கதிர்காமம் ஆலயத்துக்குள் பிரவேசித்த பொழுது திடீரென சரிந்து விழுந்தார்.
இந்நிலையில் அவரை கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார்.
மேலும் மாரடைப்பு காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.