ஒன்றாக மது அருந்திய மைத்துனர் மீது கோடரியால் தாக்குதல்
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் கோடாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கரடியனாறு, உசனார்மலை பிரதேசத்தைச் சேர்ந்த வீரையா விஜயகாந்த் (வயது – 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரும் அவரது மைத்துனரும் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறி புளுட்டுமானோடை பகுதியில் வேளாண்மை காவலுக்காக வயலுக்கு சென்று, வாடியில் தங்கியிருந்த நிலையில் மதுபானம் அருந்திய இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபர், உயிரிழந்த நபர் மீது கோடாரியால் தாக்கியதில் பலத்த காயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.