ஐபோன் பயனர்களுக்கு அப்பிள் நிறுவனம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் பயனர்களுக்கு அவசர பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியுள்ளது.

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான மற்றும் அதிநவீனத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அப்பிள் தெரிவித்துள்ளது.

சஃபாரி (Safari) மற்றும் iOS-இல் உள்ள பிற இணைய உலாவிகளால் பயன்படுத்தப்படும் ‘WebKit’ எனும் பிரவுசர் என்ஜினில் இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஹேக்கர்கள் உருவாக்கியுள்ள தீங்கிழைக்கும் இணையதளம் ஒன்றை ஒரு பயனர் பார்வையிடுவதன் மூலம், அவரது சாதனத்தில் ஊடுருவித் தரவுகளைத் திருட அல்லது தீங்கிழைக்கும் நிரல்களை இயக்க இக்குறைபாடு வழிவகுக்கும்.

இந்தத் தாக்குதல்கள் பரவலாக இடம்பெறவில்லை என்றும், குறிப்பிட்ட சில தனிநபர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருப்பதாகவும் அப்பிள் உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் அல்லது யார் இலக்கு வைக்கப்பட்டார்கள் என்ற விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.

உலகளவில் சுமார் 1.8 பில்லியன் ஐபோன் பயனர்கள் இருந்தாலும், தற்போதைய நிலையில் இது ஒரு பாரிய அச்சுறுத்தல் இல்லை என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்த ‘ஸிரோ-டே’ (Zero-day) குறைபாடுகளிலிருந்து தற்காத்துக்கொள்ள பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

உங்கள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் உடனடியாக மென்பொருள் பதிப்பை புதுப்பிக்கவும்.

சமீபத்திய பாதுகாப்புத் திருத்தங்களை நிறுவுவதன் மூலம் ஹேக்கர்களின் ஊடுருவலைத் தடுக்க முடியும்.