ஏறாவூரில் கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை மரணம்
ஏறாவூர் மக்காமடி குறுக்கு வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயதான பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
இசம்பவத்தில் ஏறாவூர் மக்காமடி குறுக்கு வீதியைச் சேர்ந்த முகம்மது சாஜித் மெஹ்ரிஸ் அய்ரா (வயது-2) என்ற பெண் குழந்தையே மரணமடைந்துள்ளது.
கல்முனையில் உணவகம் ஒன்றில் குழந்தையின் தந்தை பணியாற்றி வரும் நிலையில், வீட்டில் தாயுடன் இருந்த குழந்தை வெளியில் விளையாடிக் கொண்டிருந்த தருணம் கிணற்றுக்கு அருகில் இருந்த கதிரையில் ஏறி கிணற்றினுள் தவறி வீழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கிணற்றில் தவறி விழுந்த குழந்தை அயலவர்களின் உதவியுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஏறாவூர் பொலிசாரின் விசாரணைகளை அடுத்து ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ். நசீர் மரண விசாரணை நடத்திய நிலையில் , கிணற்றில் வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்து மரணம் என உறுதி செய்யப்பட்ட பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.